ஜூலை 30, 2006

திரைப்படக் கவிஞர்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் இல்லை. ஏன்?

.... இங்கே பதியப்பட்டது Uncategorized இல் 1:25 பிற்பகல் by iravaa


 
 
 
‘குங்குமப் பொட்டின் மங்கலம்” என்ற பாடலை (குடியிருந்தக் கோவில்) ரோஷனாரா பேகம் என்னும் பெண்மணி எழுதியிருந்தார். அதன் பிறகு பெரிய இடைவெளி…. அந்த இடைவெளியை தடுத்து நிறுத்தியவர் கவிஞர் தாமரை… எனினும், தமிழ் திரைப்படங்களுக்கு ஏன் நிறைய பெண்கள் பாட்டெழுதுவதில்லை? வாய்ப்பு தரப்படுவதில்லையா? அல்லது அவர்களே முன்வருவதில்லையா? அல்லது அவர்களே முன்வருவதில்லையா? இத்துறையில் ஆண் கவிஞர்களின் ஆக்கிரமிப்பு அதிகமிருப்பது உண்மையா? பெண்கவிஞரும், சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திருமதி ஆண்டாள் பிரியதரிசி, கவிஞர் வைரமுத்துவைச் சந்தித்து உரையாடிய போது – ஆண்டாள் பிரியதரிசினி :- நடிகைகள், நடன ஆசிரியைகள் ஏன் காமிராவைக் கையாளக் கூட பெண்கள் வந்து பிரகாசிக்கும் போது, பாட்டெழுத மட்டும் ஏன் பெண் கவிஞர்கள் வருவதில்லை? ஏதாவது காரணம் உங்களுக்குத் தென்படுகிறதா?வைரமுத்து :- அதற்குப் பல காரணங்கள், தலையாய காரணம் என்று நான் கருதுவது, நம் பெண்களின் அடிப்படை மனப்பக்குவம், மெட்டுக்குப் பாட்டெழுதும்போது அந்த இடத்துக்குப் போய் எழுதுவதை பெண் கவிஞர்கள் சயமரியாதைக் குறைவாக நினைக்கிறார்கள். எழுதிய பாட்டுக்கு மெட்டமைக்கும் காலம் இருந்த போது கூட பெண்கள் அதிகம் முன்வரவில்லை. எண்ண வளத்தில் சிந்தனையில் தரமான கவிதைகளை படைப்பதில் மிகவும் வளமான பெண் கவிஞர்கள் நம்மிடையே இருந்தாலும் உடைத்தெறிய முடியாத அல்லது உடைத்தெறிய விரும்பாத ஒரு மரபு தடைகல்லாக இருந்து கொண்டிருக்கிறது.ஆண்டாள் பிரியதரிசினி :- நீங்கள் சொல்கின்ற மரபு, நடிகை – மற்றும் திரைப்படத் துறையின் மற்ற பிரிவுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பெண்களுக்கு இல்லையா என்ன?வைரமுத்து :- மரபு எல்லோருக்கும் ஒன்றுதான். சிந்தித்துப் பார்த்தால் தமிழ் நடிகைகளில் தமிழச்சிகள் குறைவாக இருப்பது உங்களுக்கு புரியும். நமக்கு நாமே விதித்துக் கொண்டிருக்கும் கட்டுப்பாடுகள், சம்பிரதாயங்கள், நான் முன்னே சொன்ன மரபு பிடிவாதங்கள் இவை மட்டுமே பெரிய காரணம் என்று சொல்ல முடியாது என்றாலும் அவைகளும் ஒரு காரணம்தான்.ஆண்டாள் பிரியதரிசினி :- ஒருவேளை திரைப்பாடல் என்ற வடிவம் பெண்களுக்கு ஒத்து வருவதில்லையா?வைரமுத்து :- இருக்கலாம். இலக்கிய வடிவம் ஓர் உயர்ந்த வடிவம். திரைப்பாடல் வடிவம் தாழ்ந்த வடிவம். அதற்காக நாங்கள் வந்து ஏன் ‘எங்களுடைய ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்?” என்ற சிந்தனை சில பெண் கவிஞர்களுக்கு இருக்கலாம். கவிதை எழுதுவது என்பது ஒரு கலை. சினிமாவுக்குப் பாட்டு எழுதுவது ஒரு கவிதை எழுதலாம். புதுக்கவிதை எழுதலாம். வெண்பாகூட எழுதலாம். அவைகளுக்கென ஒரு தீர்மானப்பட்ட வடிவம் உண்டு. ஆனால் திரைப்பாடல்களுக்கென தீர்மானிக்கப்பட்ட வடிவம் என்று எதுமில்லை.இன்னொரு விடயம் – திரையில் ஆண்கள் சொல்லக் கூடிய கருத்துக்களையெல்லாம் பெண்கள் சொல்லமுடியாது. உதாரணத்துக்கு நான் ஒன்று சொல்கிறேன். ஒரு படத்தில் நான் ஒரு பாடல் எழுதினேன். இரண்டு கல்லூரி மாணவிகள் தோழிகள் ‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா? என்று கல்லூரி பட்டிமன்றங்களில் எல்லாம்பேசி கற்பைப்பற்றி ஒரு தீர்மான கருத்து உள்ளவர்கள். காலமாற்றத்தால் ஒரு பத்தாண்டு இடைவெளிக்குப் பின் இரண்டுபேரும் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள். கற்பை வலிவுறுத்தி ஒரு காலத்தில் பேசி பெண், விலைமகளாகி விட்ட செய்தி கேட்டு, தோழி துடிக்கிறாள். கற்பைப்பற்றி ரொம்பப் பேசினீயே, இப்போ என்ன ஆச்சு? என்று அவளைக் கேட்கிறாள். அதுக்கு அந்தப் பெண் பாடுகிறாற்போல் ஒரு பாட்டு எழுதினேன்.கற்பா
அது கறுப்பா சிவப்பா
பெண்ணே
அது உனக்கா எனக்கா
கற்பு என்பது உள்ளபடி
கர்ப்பப் பையில் இல்லையடி
அது மனதில் உள்ளது
கண்மணியே நான் அப்படிப்
பார்த்தால் நீ பத்தினியே…”என்று பாடல் போகிறது. இந்தக் கருத்தை நான் ஆணாக இருந்தாலும் துணிவோடு சொல்ல முடிந்தது. இப்படித் துணிவாகச் சொல்லப்படும் கருத்துக்களை ஒரு பெண் சொன்னாலும், அது படத்தில் சம்பந்தப்பட்ட பாத்திரங்களுக்காகப் படைக்கப்படும் வரிகள் என்ற அளவில் பார்த்து, கவிஞரோடு சம்பந்தப்படுத்தாத பார்வையை சமூகம் பெறுகின்ற நாளில், பெண் கவிஞர்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்று நான் கருதுகிறேன்.ஆண்டாள் பிரியதரிசினி :- ‘குங்குமப் பொட்டின் மங்கலம்” என்று ‘குடியிருந்த கோயில்” படத்தில் ரோஷனாரா பேகம் என்கிற ஒரு பெண் கவிஞர் எழுதிய பாடல் பிரபலமாயிற்று. அதற்கப்புறம் யாரும் வரவில்லையே? அப்புறம் இப்போது தாமரை சொல்லும்படி இருக்கிறார்.வைரமுத்து :- ரோஷனா பேகம் காலத்தில் நான் ஃபீல்டுக்கு வரவில்லை. எனக்குத் தெரிந்து சில பெண்கள் முயற்சி செய்தார்கள். ‘இது நமக்கு ஒத்து வராது’ என்று ஒதுங்கிக் கொண்டார்கள்!ஆண்டாள் பிரியதரிசினி :- இரவு பகல் என்று நேரம் பார்க்க முடியாது. நேரம்கெட்ட நேரத்தில் கண்விழித்துக் கொண்டிருக்க வேண்டிவரும். இதெல்லாம் பெண்களின் தன்மைக்கு ஒத்துவராது என்று கூட காரணமாக இருக்கலாம் இல்லையா?வைரமுத்து :- இது ஒரு பிரதான காரணமாகச் சொல்லமுடியாது என்றே நான் நினைக்கிறேன். நீங்கள் சொன்னீர்கள் நடிகைகள் டான்ஸ் மாஸ்டர்கள், காமிரமென், எல்லோருக்கும் தான் இந்த ‘கண் விழிப்பது” பொருந்தும். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு பணியாற்றவில்லையா? உண்மையான காரணம் ஒரு நடிகைக்கு ஜடியாலஜி கிடையாது. கவிஞனுக்கு இருக்கு. ஒரு நடிகை தன்னைப் பற்றிப் பேசப்படும் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் ‘பாடல் எழுதும் பெண்ணால் அது முடியுமா’ என்று பார்க்க வேண்டும்.ஆண்டாள் பிரியதரிசினி :- சினிமா உலகில் அழகுக்கும், கவர்ச்சிக்கும் இருக்கும் மரியாதை, அறிவுக்கு இல்லை. இதை ஒப்புக் கொள்வீர்களா?வைரமுத்து :- மாட்டேன்! பெண் எழுத்தாளர்கள் பலருடைய கதைகள் தமிழில் படமாக்கப்பட்டு வெற்றி பெற்றிருக்கின்றனவே! அது அறிவுக்கும், திறமைக்கும் தரப்பட்ட அங்கீகாரம் இல்லையா? மரியாதை இல்லையா?ஆண்டாள் பிரியதரிசினி :- என்ன தான் சொல்லுங்கள், ஆண்களின் ஆதிக்கம் அதிகமாகத்தான் இருக்கிறது இத்துறையில்!வைரமுத்து :- என்னைவிட பாடலாசிரியர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். பேராற்றல் படைத்த பெருமக்கள் இருக்கிறார்கள். நான் சொன்னபடி இருந்த தொழில்நுட்ப வடிவம் தனக்குச் சரிபட்டு வராததால் ஒதுங்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.ஆண்களில் கூட எல்லா கவிஞர்களும், அவர்கள் எவ்வளவு சிறப்பான படைப்புத்தன்மை பொருந்தியவர்களாக இருந்தாலும் சினிமா பாடலாசிரியர்களாக சிறப்பாக வரமுடியவில்லை. வந்துவிடவும் முடியாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வடிவம் ஒத்துப் போனால் ஆணென்ன? பெண்ணென்ன?ஆண்டாள் பிரியதரிசினி :- சரி, மெட்டுக்குப் பாட்டெழுதும் காலம்மாறி, பாட்டுக்கு மெட்டு போடும் காலம் மீண்டும் மலர்ந்து வருமானால் அப்போது பெண் கவிஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?வைரமுத்து :- அப்படி வந்தால்கூட பெண்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? நான் எழுதி வைத்திருந்த பாடல் பயன்படமா பாருங்கள் என்றுதான் கேட்பார்கள்! பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் இப்போது படங்களில் பயன்படுத்தப்படுகின்றன. பயன்படுத்தப்பட்டன. அவர்களெல்லாம் என்ன சிச்சுவேஷனுக்காக பாட்டெழுதினார்கள்.ஆண்டாள் பிரியதரிசினி :- இந்தப் பிரச்சினை தீர ஏதாவது வழி உண்டா?வைரமுத்து :- வேண்டுமானால் ஒன்று செய்யலாம். தயாரிப்பாளர்கள் ஒரு ‘சிச்சுவேஷனை” அறிவித்து, இதற்குப் பெண் கவிஞர்கள் பாட்டெழுதலாம். ‘சிறந்த பாடலைப் பயன்படுத்திக் கொள்கிறோம். என்று அறிவிப்புச் செய்யலாம். அப்போது நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொள்வார்கள். ஒன்றிரண்டு பாடல் தேறலாம்.ஆண்டாள் பிரியதரிசினி :- நீங்கள் சொன்ன தொழில்நுட்ப வடிவத்தை பெண் கவிஞர்களும், பெண் கவிஞர்கள் தங்கள் பாடலில் சொல்லும் கருத்துக்களை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை இணைத்துப் பார்க்காமல் இருக்கிற தன்மையை சமூகமும் ஏற்றுக் கொள்ளும் காலம் விரைவில் வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.வைரமுத்து :- நானும்தான். அப்படி ஒரு காலம் வருமேயானால் அதை இருகரம் நீட்டி வரவேற்கும் முதல் ஆளாக நானிருப்பேன்.

 

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.